வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

உணர்வுகள் கொந்தளிக்கும்போது...

நமக்குள் ஏற்படும் உணர்ச்சிக்கொந்தளிப்புகள் உடலைப் பாதிக்கின்றன என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. மனிதர்களுக்கு அதிகமாக மனநெருக்கடி, அழுத்தத்தை ஏற்படுத்தும் எட்டு விஷயங்களை ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் தாமஸ் ஹோம்ஸும், டாக்டர் ரிச்சர்ட் ரகேயும் பட்டியலிட்டுள்ளனர்:

அவை, நெருங்கிய குடும்ப உறுப்பினரின் மரணம், வாழ்க்கைத் துணையின் மரணம், உடல்நலக் குறைவு, காயம், திருமணம், விவாகரத்து, பிரிவு, வேலையிழப்பு மற்றும் சிறைத் தண்டனை.

மனம், உணர்ச்சிக் கடலில் தக்கையாய் தந்தளிக்கும்போது ரத்தத்தில் `ஹார்மோன்களும்`, `நிïரோ டிரான்ஸ்மீட்டர்களும்` விடுவிக்கப்படு கின்றன. ரத்தத்தில் விடுவிக்கப்படும் மூன்று முக்கியமான விஷயங்கள் கார்ட்டிஸோல், அட்ரினலின், நார்அட்ரினலின் ஆகியவை ஆகும். கார்ட்டிஸோல், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் சர்க்கரையை விடுவித்து, நோய் எதிர்ப்பு அமைப்பு முறையாக செயல்படுவதைத் தடுக்கிறது.

அட்ரினலின், நார்அட்ரினலின் ஆகியவை, வியர்வை, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகிய வற்றை அதிகரித்து, உடம்பை அதிக உஷார்த் தன்மையில் வைக்கின்றன.

நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில் கடந்த 2005 -ம் ஆண்டு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையின்படி,
கேட்கொலமைன்ஸ், எபிநெப்ரீன், நார்ரிப்பைன்ரீன் ஆகிய வேதிப்பொருட்கள் இதயத் தசைகளைத் திடீரென ஸ்தம்பிக்க வைக்கலாம் என்கிறார்கள், மேற்கண்ட ஆய்வாளர்கள்.

உணர்வுப் பிரச்சினையால் ஏற்படும் உடல் பிரச்சினைகள்:
தலைவலி
தூக்கமின்மை
குமட்டல் உணர்வு
வேகமான சுவாசம்
கிறுகிறுப்பு
அதிர்வு
மார்பு வலி
சீரற்ற இதயத் துடிப்பு
வயிற்றுப்போக்கு
தன்னை அறியாமல் சிறுநீர் கழித்தல் ஆகியனவாகும்

மனநலம் நன்றாயிருக்க மனநல ஆலோசகர் கூறும் அறிவுரை:-

உங்களின் மனம் வாடிக்கிடக்கும்போது, வழக்கமாகக் கூடாது என்று தடுக்கப்படும் ஏதாவது ஒன்றைச் சாப்பிடுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றால் சாக்லேட் கூடச் சாப்பிடலாம். ஆனால் நிதர்சனத்திலிருந்து தப்பிக்கும் வழியாக உணவைப் பயன்படுத்தத் தொடங்காதீர்கள். காரணம் உணவு மட்டுமே முழுக்க முழுக்கக் கை கொடுக்காது.

மனம் சோகமாக இருக்கும்போது உணவைத் துறப்பவர்களும் இருக்கிறார்கள். அதுவும் மோசமானதே. நீங்கள் ஒரு நெருக்கடி நிலையில் இருக்கிறீர்கள். அதை முடிந்தவரை சிறப்பாகக் கையாள வேண்டும். உங்கள் உடம்புக்கு அவ்வப்போது போதுமான எரிபொருள் கிடைப்பது அவசியம்.

ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிடுங்கள், சரியான அளவு சாப்பிடுங்கள். சுவையான உணவுகள் எல்லாம் ஆரோக்கியமற்றதாக இருக்கும் என்று கூற முடியாது. ஒரு நல்ல `சூப்` உங்களுக்கு இதமளிக்கும். உங்களுக்குப் பிடித்தமான காய்கறிச் சமையல் உங்களை நல்லவிதமாக உணர வைக்கும்.

சோகமான நினைவுகளில் இருந்து உங்களைத் திசை திருப்பும் சிறந்த ஒரு விஷயம், தினசரி மேற்கொள்ளும் உடற்பயிற்சி. இதில் சிக்கலான விஷயம், உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பதுதான். நீங்கள் ஒரு வழக்கத்துக்கு வந்து விட்டால் அது பெருமளவு நன்மை புரியும். இந்த விஷயத்தில் உங்களை நீங்களே வலுக்கட்டாயமாகப் பிடித்துத் தள்ளாதீர்கள். நீங்களே ரசித்து உடற்பயிற்சி செய்யுங்கள். உடம்புக்கும் மனதுக்கும் நல்ல தொடர்பு உண்டு.

துயரத்தில் இருப்பவர்களுக்கு...

இழப்பைச் சந்தித்து துயரத்தில் வாடியிருப்பவர்களுக்கு எப்படி ஆறுதலாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்...

* துயரத்தில் இருப்பவர்களுக்கு அறிவுரை சொல்லாமல், அவர்கள் கூறுவதை அமைதியாகக் கேளுங்கள்.
* எவர் ஒருவராலும் ஓர் இழப்புக்கு மாற்றாக இருக்க முடியாது, அதை மாற்றவும் முடியாது என்பதை உணருங்கள். காலம்தான் எல்லாவற்றையும் குணப்படுத்த வேண்டும்.
* உங்களின் சொந்தக் கதைகளை எடுத்து விடாதீர்கள்.
* மிகவும் பொறுமையாகவும், புரிதலோடும், இதமாகவும் இருங்கள். `நீங்கள் எந்தளவு வருத்தப்படுகிறீர்கள் என்று அறிய விரும்புகிறேன்` என்று கூறாதீர்கள்.
* சம்பந்தப்பட்டவர் விரும்பாவிட்டால், உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தாதீர்கள்.
* வழக்கமானவர்கள் வந்து சென்றபிறகு செல்லுங்கள்.
* மறைந்தவரின் நினைவுநாட்களை ஞாபகப்படுத்தி, அப்போது ஆதரவாக இருங்கள். `இழப்பு` குறித்து ஞாபகப்படுத்துகிறோமோ என்று கவலைப்பட வேண்டாம். சம்பந்தப்பட்டவர் ஏற்கனவே அந்த நினைவில்தான் இருப்பார்.
* இழப்புக்குள்ளானவர் ஈடுபடக்கூடிய விஷயங்களை அவருக்குத் தெரிவித்து, உதவுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக